"Live as if u were to die tomorrow and learn as if u were to live forever" - M.K. Gandhi

ennavaayitru en bharathi veenai..?





என்னவாயிற்று என் பாரதி வீணை ???

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ,....
என்ற பாடலின் சந்தம்....

செத்துப் புவியிடை வீழ்ந்தான் -- ஆகா
பெற்றுத் தீருமுன்னே பெற்றிட்டோம் என்றான்.
ஊனுயீர் சிந்தை கலந்து -- இந்த 
நானிலம் இசைக்க வீணையும் தந்தான்

பெற்றச் சுதந்திரம் இன்று -- நடு
ரோட்டில் முறைகெட ஆடிட கண்டோம் ..
கண்டோம் கண்டோம் கண்டோம் - வீணை 
வெட்டித் தீதனில் எரிப்பதைக் கண்டோம்

சொந்த சகோதரர் இலங்கைத் -- தீயில்
வெந்து தவிப்பதைக் கண்ணாரக் கண்டோம்
மாக்களைக் காத்திடும் நாமோ -- மாதர் 
நொந்து இறப்பதைப் பார்த்திட லாமோ....?

உண்டென்றால் ஒன்றுசெய் சக்தி -- கடல்
உள்கொண்டு பாரதம் லங்கைசேர் சக்தி
வந்தோரை வாழ்வித்த நாமே -- வஞ்சம் 
செய்தாரை உளமார வழ்விக்க லாமே ...!!

"தேசத்தை காத்தல்செய் " என்றாய் -- மக்கள்
வேடத்தைக் காணாது பாக்கள் ஏன் செய்தாய் ..?
தக்கத்தக தக்கத்தக தக்கா -- என்று
கூத்திட்டு ஆடிட்டார் நாடாளும் மக்கள்

கூறிட்டு வித்திட்டார் நாட்டை -- தக்கத் 
தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ...
வெட்டிப் புசித்திட்டார் தங்கம் -- இங்கே 
ஒட்டிக் குடல்வற்றி ஏழையின் அங்கம்
பிச்சைப் பிழைப்புதான் ரோட்டில் சிலர் 
உச்சி குளிர்ந்தனர் சுவிஸ்பாங் நோட்டில்

அச்சத்தின் உச்சத்தில் பெண்டிர் -- காந்தி 
கண்கண்ட ஒருகனவு இதுதானா கண்டீர்
நாமேமோ பலியாடு சேவல் -- மும்பை 
உயிர்கொல்லிக் கேனோ பலகோடி காவல்

மற்றொன்று வேண்டிட்டேன் சக்தி -- பாரில்
எங்கெங்கு கண்டாலும் முறைகெட்ட புத்தி
முட்டித் தெறிக்கட்டும் மேகம் -- தக்கத் 
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்

டட்டட்டட டட்டட்டட டட்டா -- தலை 
தட்டி ஒலிக்கட்டும் இடிதட்டும் தாளம் 
கொட்டி நிரப்பட்டும் மாரி -- இந்த 
வையம் துறக்கட்டும் மக்களை வாரி 

அத்துணை அள்ளிப்போ காளி -- ஒற்றை 
கடல்கொண்டு உருவாக்கு பேரலை ஆழி
வீழட்டும் வீழட்டும் பூமி -- சக்தி 
உனதருமை இதுவென்று இப்போதே காமி...


மீண்டு முளைக்கட்டும் மெதுவாய் -- மக்கள் 
மேலின்றி கீழின்றி எல்லோர்க்கும் பொதுவாய்
அன்றாயின் சமஉரிமை காப்போம் -- என்
முண்டாசன் கண்டிட்ட சமுதாயம் காப்போம்....

நிறைவு.

(ஐதராபாத் மகாகவி பாரதி விழாவின் கவியரங்க நிகழ்வில், பாடிய கவிதை)
(கவியரங்க தலைமை "கவிமாமணி . இலந்தை ராமசாமி)

இவண் ,
கார்த்திகேயன் .இ